முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னாவை திரும்ப பெறவேண்டும் என டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேறப்பட்டதாக பரவிய தகவலுக்கு ஆம் ஆத்மி மறுப்பு தெரிவித்துள்ளது. 1984 ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டதை தொடர்ந்து நிகழ்ந்த வன்முறையில் ஏராளமான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில், சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை இந்தியாவின் மோசமான இனப்படுகொலை என டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திருப்ப பெறவேண்டும் என்றும் அம்மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் ஜர்னெல் சிங் தெரிவித்தார். இதற்கிடையே, ராஜிவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னாவை திரும்ப பெற வேண்டும் என தீர்மானத்தில் குறிப்பிடப்படவில்லை என ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் சௌரப் பரத்வாஜ் விளக்கமளித்துள்ளார்.