துரைமுருகனுக்கு சொந்தமான குடோனில் இருந்து 30 கிலோ தங்க காசுகள், ரொக்கம் பறிமுதல்

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் 2 நாட்களுக்கு முன்பு வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். துரைமுருகன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கல்லூரிகளில் விடிய விடிய நடத்திய சோதனையில் முதல் கட்டமாக 10 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரி மற்றும் சிமெண்ட் குடோனில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதற்காக சாக்கு மூட்டை மற்றும அட்டைப்பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 5 பணம் இயந்திரங்கள் மூலம் பணத்தை எண்ணும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட பணம் அனைத்தும் பேப்பர்களால் சுற்றப்பட்டு வார்டு வாரியாக எண்கள் எழுதப்பட்டு, வாக்காளர்களுக்கு வினியோகிக்க வைத்திருப்பதாக தெரிய வருகிறது.

வாக்களாளர் பட்டியலும், வார்டு வாரியாக வாக்காளர்கள் பெயர்கள் கொண்ட லிஸ்டும் பணத்தோடு இணைக்கப்பட்டு பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன.

இந்த தொடர் சோதனையின் நீட்சியாக துரைமுருகன் உதவியாளர் அஸ்கர் அலி வீட்டில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் 5 கோடி ரூபாயை பறிமுதல் செய்து வருகின்றனர். அதேப்போல் இந்த சோதனையில் பெண் வாக்காளர்களுக்காக வினியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டு இருந்த 30 கிலோ தங்க காசுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்திருக்கிறது.

ஒரே இடத்தில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதால் மீண்டும் துரைமுருகனுக்கு சொந்தமான கிங்ஸ்டன் கல்லூரியில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

Exit mobile version