தமிழர்களின் தாய்மடி கீழடி : அகழாய்வை ஆழப்படுத்திய தமிழக அரசு!

தமிழர்கள் தொன்மையான வரலாற்றை உடையவர்கள் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைக்கப்பெறாமல் இருந்து வந்த நிலையில், அதற்கான அடுக்கடுக்கான சான்றுகளை உலகிற்கு வழங்கி தமிழரின் பெருமையை கட்டிக்காத்துள்ளது, கீழடி. தமிழர்களின் தாய்மடியாகியுள்ள கீழடி குறித்த வரலாற்று மற்றும் அறிவியல் பூர்வமான பார்வைகளை அறிந்து கொள்வோம்.

 

1973-ம் ஆண்டில் கீழடியில் ஆசிரியராக இருந்த பாலசுப்ரமணியம் என்பவர், அப்பகுதியில் கிணறு தோண்டும்போது கிடைத்த செங்கற்கள், பானை ஓடுகள் போன்றவற்றை, சங்ககால பொருட்களாக இருக்கும் என கணித்து சேகரித்து வைத்தார். பின்னர், 2013-ல் மத்திய தொல்லியல் துறை ஆய்வாளர்கள் அமர்நாத் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மூன்று பேர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

அதன் பிறகு கீழடியில் நடைபெற்ற முதல் இரண்டு கட்ட ஆய்வுகள் ஒட்டுமொத்த அறிவுலகையும் தமிழகம் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. இதுவரை முதுமக்கள் தாழி மட்டுமே கிடைத்து வந்த ஆய்வுகளில், முதன்முறையாக ஒரு நகர நாகரீகத்திற்கான கூறுகள் தென்பட ஆரம்பித்தது. செங்கற்கள், நெசவு ஆலையில் பயன்படுத்தப்படும் சாயம் போடுவதற்கான தொட்டிகள், தண்ணீரை கொண்டு செல்வதற்கான வடிகால்வாய்கள் போன்றவை கிடைத்தன.

முதலிரண்டு கட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் கிட்டத்தட்ட 7ஆயிரத்து 800 பொருட்கள் கிடைத்தன. இதுநாள்வரை புதைமேடுகளின் நிலமாக ஏகடியம் செய்யப்பட்ட தமிழ் நிலத்தில் எட்டுத் திக்கும் கட்டியாண்ட ஒரு சமூகம் சீரோடும் – சிறப்போடும், எண்ணோடும் – எழுத்தோடும் இருந்ததற்கான தரவுகள், புதைபூமியில் கிடைத்த புதையல்களாய் நம்மை பெருமிதம் கொள்ளச் செய்தன. இந்நிலையில், அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிடமாற்றம் செய்யப்பட, 2016-ம் ஆண்டு மூன்றாவது கட்ட அகழாய்வு வேறு அதிகாரியால் முன்னெடுக்கப்பட்டது.

ஆனால் கீழடியில் நகர நாகரீகத்தின் தொடர்ச்சி கட்டுமானங்கள் கிடைக்கவில்லை என்ற அவரது அறிக்கையால் மத்திய தொல்லியல் துறை அங்கிருந்து வெளியேறியது. மத்திய அரசின் இந்த முடிவு தமிழர்களுக்கு பேரிடியாய் அமைந்த நிலையில், தானே நேரடியாக அகழாய்வு பணிகளை தொடர்வது என்று களத்தில் குதித்தது தமிழக அரசு. ஆம், மத்திய அரசிடம் அனுமதி பெற்று தமிழக தொல்லியல் துறை கீழடியின் நான்காவது மற்றும் ஐந்தாவது கட்ட அகழாய்வுகளை நடத்தியது.

நான்கு மற்றும் 5ம் கட்ட அகழாய்வில் மொத்தம் 5ஆயிரத்து 820 பொருட்கள் கிடைத்தன. கல்லை பல வடிவங்களில் அணியக்கூடிய அளவுக்கு கீழடி மக்களிடம் தொழில்நுட்பம் இருந்துள்ளது. தங்க ஆபரண துண்டுகள் கிடைத்தது, அந்நகரத்தின் வளமையை காட்டுகிறது. அதனை விட மிக முக்கியமாக இரண்டரை மீட்டர் நீளம் கொண்ட கட்டிட வடிவங்கள் தென்பட்டன. இதுதான் நகர நாகரீகம் என்ற வார்த்தைக்கு பொருள் தருபவை. நீர் மேலாண்மை, தொழில் நகரம், தொழிற்கருவிகள் போன்றவற்றுக்கான சான்றுகளோடு, நகர நாகரீகம் இருந்ததற்கான பல சான்றுகளும் கிடைத்துள்ளன.

இது மட்டுமல்லாமல், மக்கள் வசிப்பிடம், தொழிற்கூடம், இடுகாடு என மூன்றும் அகழ்ந்து எடுக்கப்பட்டால் வைகை நதிக்கரையில் செழிப்பான கல்வியறிவு பெற்ற ஒரு நகர சமுதாயம் இருந்ததை நம்மால் உறுதிப்படுத்த முடியும். அவ்வாறு அது உறுதிப்பெறுமானால், இந்தியாவின் வரலாற்றை திருத்தி எழுத வேண்டி இருக்கும்.

Exit mobile version