நாயகர்களை இல்லையில்லை நாயகங்களை எல்லா வடிவங்களிலும் பார்க்கலாம். ஆம்.. விலங்குகளும்கூட சில நேரங்களில் அசாதாரணமாக வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு, திறமைகாட்டுகின்றன. கம்போடியாவில் உயிர்காக்கும் பணியில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக ஆப்பிரிக்க வகை எலி ஒன்றுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பதக்கத்தை வென்ற முதல் எலி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக 30-க்கும் மேற்பட்ட விலங்குகளுக்கு இந்தப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, பாக்கா என்ற போலீஸ் நாய்க்கு இவ்விருது வழங்கப்பட்டது.
ஹீரோ – ராட் (HERO RAT) என்று அழைக்கப்படும் ஆப்பிரிக்க வகை எலி, கடந்த ஏழு ஆண்டுகளாக கண்ணிவெடிகளைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுவருகிறது. இதுவரை 39 கண்ணிவெடிகளையும் பதுக்கிவைக்கப்பட்ட பலவகை வெடிமருந்துகளையும் இந்த எலி கண்டறிந்துள்ளது. இதன் சேவையைப் பாராட்டி, தனியார் நிறுவனம் ஒன்று செப். 25ஆம் தேதி தங்கப்பதக்கம் வழங்கி கவுரவித்துள்ளது.