உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவில் 463-ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாகை மீரா பள்ளி வாசலில் இருந்து கொடி ஊர்வலம் தொடங்கியது. சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட கொடிகள் துவா ஒதப்பட்டு, கப்பல் வடிவ ரதம், பீங்கான் ரதம், பெரிய ரதம், சின்ன ரதம், செட்டிப்பல்லக்கு ஆகிய 5 ரதங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
தாரை தப்பட்டைகள் முழங்க நாகை மீராப்பள்ளி வாசலில் இருந்து புறப்பட்ட ரதங்கள் முக்கிய வீதிகள் வழியாக, நாகூர் தர்கா அலங்கார வாசலை இரவு வந்தடைந்தது. பின்னர் சிறப்பு துவா ஓதப்பட்டு 5 மினாராக்களிலும் ஒரே நேரத்தில் கொடிகள் ஏற்றப்பட்டன. அப்போது வாண வேடிக்கைகள் விண்ணை அலங்கரிக்க, வண்ண விளக்குகளால் ஜொலித்த தர்கா மினாராக்களை கண்டு பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கந்தூரி விழா கொடியேற்றத்தையொட்டி ஆயிரத்து 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் தர்கா நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிகாக அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் கந்தூரி விழா கொடியேற்ற நிகழ்ச்சி கலந்து கொண்டனர்.