இந்திய- சீன உறவில் புதிய சகாப்தம் தொடக்கம்: பிரதமர் மோடி

கோவளம் தாஜ் விடுதிக்குச் சென்ற ஷி ஜின்பிங்கை விடுதி வாயிலில் நின்ற தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். விடுதி வளாகத்தில் காரில் சென்று இறங்கிய ஷி ஜின்பிங்கைப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று அழைத்துச் சென்றார். அதன்பின் இருவரும் பேட்டரி காரில் விடுதியில் உள்ள பூங்காவின் இயற்கை எழிலைப் பார்வையிட்டபடி, கடற்கரையோரம் உள்ள மண்டபத்துக்குச் சென்றனர்.

அப்போது, கோவளம் தாஜ் விடுதியின் கடலோரத்தில் உள்ள மண்டபத்தில் குண்டு துளைக்காத கண்ணாடி அறையில் வங்கக் கடலின் இயற்கை எழிலைப் பார்வையிட்டபடி பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகிய இருவரும் பேச்சு நடத்தினர். இரு நாடுகளிடையே வணிகம், பொருளாதாரம், பண்பாடு உள்ளிட்ட துறைகளில் உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் பேச்சு நடத்தியதாகக் கூறப்படுகிறது. ஜம்மு காஷ்மீர், எல்லைப் பிரச்சனை, பிரம்மபுத்திரா ஆற்று நீர்ப் பகிர்வு ஆகியவை குறித்தும் பேச்சு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அப்போது, மாமல்லபுரச் சந்திப்பு இந்திய – சீன உறவில் புதிய சகாப்தத்தின் தொடக்கம் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தமிழர்களின் விருந்தோம்பல் தங்களை ஆட்கொண்டுவிட்டதாகச் சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

Exit mobile version