ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 17 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான 3-ம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
5 கட்டங்களாக ஜார்க்கண்ட் தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று 17 சட்டப்பேரவை தொகுகளுக்கு இன்று தேர்தல் நடந்து வருகிறது. மொத்தம் 32 பெண்கள் உட்பட 309 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இந்த சட்டப்பேரவைக்கான 3-ம் கட்ட வாக்குபதிவு காலை 7 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே மக்கள் வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்த தேர்தல் பணியில் 40 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுவதாகவும், தேர்தலை சுமூகமாகவும், அமைதியாகவும் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி வினய்குமார் சௌபே தெரிவித்திருந்தார். வாக்குப்பதிவு நடைபெறும் 7 ஆயிரத்து 16 வாக்குச்சாவடிகளில், பதட்டமான சாவடிகள் என கண்டறியப்பட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இன்று நடைபெறும் மூன்றாவது கட்ட வாக்குப் பதிவினை தொடர்ந்து வரும் 16, 20 ஆகிய தேதிகளில் 4 மற்றும் 5-ம் கட்ட வாக்குப்பதிவும், டிசம்பர் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.