மனிதர்களைப் போல போதையில் தள்ளாடும் மிருகங்கள்

மது அருந்தி தலைக்கு மேல் போதை ஏறியவர்கள் செய்யும் செயல்கள் மிகவும் விநோதமானவை. தங்களை மறந்து போதை அசாமிகள் செய்யும் சேட்டைகள் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம்.

ஆப்பிரிக்க வனங்களில் அமருல்லா என்ற குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த பழங்கள் காணப்படுகின்றன. இந்தப் பழங்களை உண்ணும் காண்டா மிருகம், ஒட்டகச் சிவிங்கி, காட்டுப்பன்றி, யானை, குரங்கு உள்ளிட்ட விலங்குகள் போதையில் மனிதர்கள் தள்ளாடுவதைப் போல தள்ளாடுகின்றன. யானைகள் அமருல்லா மரங்களை தன் தலையால் இடித்து பழங்களை கீழே விழ வைத்து உண்கின்றன. பழங்கள் மட்டுமன்றி இலை மற்றும் கிளைகளையும் சேர்த்து உண்கின்றன. இதனால் இந்த மரம் யானை மரம் என அழைக்கப்படுகிறது.

அமருல்லா பழங்களை உண்டால் குழந்தை பிறக்கும் என நம்பிக்கை உள்ளூர் மக்களிடையே காணப்படுகிறது. இதனால் உள்ளூர் மக்கள் இதைக் கல்யாண மரம் என அழைக்கின்றனர்.

தென்னாப்பிரிக்காவில் மதுபானம் தயாரிக்க இந்தப் பழங்களை பயன்படுத்தி வருகின்றனர். சகாரா பாலைவனத்தை ஒட்டிய காடுகளில் அமருல்லா பழ மரங்கள் வளர்கின்றன. நம்ம ஊர் பனைமரம் போல அமருல்லாவில் ஆண் மற்றும் பெண் என இருவகைகள் உள்ளன. இவற்றில் பெண் அமருல்லா மரத்தில் மட்டுமே பழம் காய்க்கும். வருடத்தின் குறிப்பிட்ட சில வாரங்களைத் தவிர அனைத்து வாரங்களிலும் அமருல்லா மரங்கள் பழங்களைத் தருகின்றன. இந்தப் பழங்கள் பாக்டீரியாக்களால் நொதிக்க வைக்கப்பட்டு மதுபானம் தயாரிக்கப்படுகிறது. பின்னர் 17க்கு 83 என்ற சதவீதத்தில் க்ரீமுடன் கலக்கப்பட்டு மதுபானமாக விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் மதுபானம் ஆப்பிரிக்காவில் மிகவும் பிரபலமாக உள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற போட்டியில் சிறந்த மதுபானமாக அமருல்லா தேர்ந்தெடுக்கப்பட்டது. பிரேசில் நாட்டினர் அமருல்லா மதுபானத்தை மிகவும் விரும்பி உண்கின்றனர்.

Exit mobile version