இந்தியாவில் முதல் முறையாக BEACH WRESTLING போட்டி, மாமல்லபுரத்தில் நாளை நடைபெறுகிறது. சர்வதேச மல்யுத்த வீரர்கள் அடங்கிய மாநில அணிகள் பங்கேற்க உள்ள இப்போட்டியை குறித்து விவரிக்கிறது, இந்த செய்தித் தொகுப்பு…
கி.பி. 13ஆம் ஆண்டு முதலே பிரான்ஸ், ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் மல்யுத்தப் போட்டி இருந்ததாக வரலாற்றுச் சிற்பங்கள் கூறகின்றன். அப்போது அங்கீகரிக்கப்பட்ட போட்டியாக கருதாமல் ஒரு பொழுதுபோக்காக திருவிழாக்களின்போதும், பல்வேறு நிகழ்ச்சிகளின்போதும் மல்யுத்தம் இருந்தது.
முதன்முதலாக 1888ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் தேசிய மல்யுத்தப் போட்டி நடைபெற்றது. பின்னர், 1904 மிசௌரி ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது மல்யுத்தப் போட்டி. 1912ஆம் ஆண்டில் உலக மல்யுத்த சங்கமான UNITED WORLD WRESTLING பெல்ஜியத்தில் நிறுவப்பட்டது.
மண் மற்றும் புல்தரையில் மட்டுமே நடைபெற்று வந்த மல்யுத்தப் போட்டி, தற்போது உள் விளையாட்டு அரங்கில் அதற்கான பிரத்யேக ரப்பர் விரிப்பில் நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக், உலக போட்டிகள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட மல்யுத்தப்போட்டிகள் அனைத்தும் உள்விளையாட்டரங்கிலேயே நடைபெற்று வருகிறது.
பீச் வாலிபால் உள்ளிட்ட போட்டிகளைப்போல் மல்யுத்தமும் கடற்கரை மணலில் தற்போது அரங்கேறியுள்ளது. 2006ஆம் ஆண்டு முதல் முறையாக துருக்கியில் உலக பீச் மல்யுத்தப் போட்டி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் பீச் மல்யுத்தம் விறுவிறுப்பானது. உலக அளவில் பீச் மல்யுத்தம் அறிமுகப்படுத்தப்பட்டு, நடைபெற்று வந்தாலும், இந்தியா அதில் பங்கேற்க இல்லை.
தற்போது, மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் ஆதரவுடன், தேசிய அளவிலான பீச் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது. மாமல்லபுரம் கடற்கரையில் ஞாயிறு அன்று தொடங்கும் இந்தப் போட்டியில் ரயில்வே, சர்வீசஸ் மற்றும் சர்வதேச மல்யுத்த வீரர்கள் அடங்கிய அனைத்து மாநில அணிகளும் இதில் பங்கேற்க உள்ளது. ஒவ்வொரு எடைப்பிரிவிலும் ஒருவர் என நான்கு ஆடவர், நான்கு மகளிர் என ஒவ்வொரு மாநிலத்தின் சார்பில் 8 பேர் பங்கேற்க உள்ளனர்.
உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் மல்யுத்தப்போட்டிக்கு விளையாட்டு ஆர்வலர்களிடையே கிடைக்கும் ஆதரவு, பீச் மல்யுத்தப் போட்டிக்கும் கிடைக்குமா என்பதை மாமல்புரத்தில் நடைபெறவுள்ள போட்டிக்கு பின்னரே தெரியும்…
நியூஸ் ஜெ செய்திகளுக்காக டேவிட்…