65 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட் வீரர் ஒருவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரிய தலைவராக போட்டியின்றி தேர்வாகியுள்ளார். BCCI எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்துக்கு சரியான நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு, ஒய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி லோதா குழுவிற்கு ஒதுக்கப்பட்டது.
இதனையடுத்து, 33 மாதங்களுக்கு பிறகு தற்போது BCCI ன் நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கிரிக்கெட் அனுபவம் இல்லாத தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளே இதுவரை நிர்வாகிகளாக இருந்து வந்தனர். இதனால் கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்வதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்தன.
இந்நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையிலான குழவின் ஆய்வுக்கு பின், இந்திய அணியின் முன்னாள் தலைவரும், மேற்கு வங்க கிரிக்கெட் க்ளப்பில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அனுபவம் பெற்ற சவ்ரவ் கங்குலி Bcci க்கு தலைவராக தேர்வாகியிருப்பது வரவேற்கதக்கது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளனர்.
பிசிசிஐ தலைவராக இந்திய அணியின் முன்னாள் தலைவர் சவ்ரவ் கங்குலியும், செயலாளராக இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வின் மகன் ஜெய் ஷாவும், மத்திய நிதி துறை இணை அமைச்சராக உள்ள அணுராக் தாக்கூரின் தம்பி அருண்சிங் துமால் பொருளாளராகவும் பதவியேற்க உள்ளனர்.
இவர்கள் அனைவரும் வருகிற 23 ம் தேதி முறைப்படி பதவியேற்றுக்கொள்கிறார்கள்.