மதுரை மாவட்டம் கிண்ணிமங்கலத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில், முதல் பள்ளிப்படை பற்றிய குறிப்புகள் காணப்படுவதாக தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.
தமிழி எண் பட்டைத்தூணில் பொறிக்கப்பட்டுள்ள விவரங்கள், கி.மு. 2 முதல் 1-ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டவை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அங்கு கிடைத்துள்ள வட்டெழுத்துக் கல்வெட்டு, கி.பி. 7 மற்றும் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள பள்ளிப்படை என்ற சொல், முதன் முதலாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாண்டிய நாட்டில் மதுரைக்கு அருகிலேயே கட்டப்பட்ட தமிழ்நாட்டின் முதல் பள்ளிப்படை இது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 19ம் தேதி நடத்தப்பட்ட ஆய்வில், கி.பி.1722ஆம் ஆண்டைச் சேர்ந்த விசயரங்க சொக்கநாதன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில், பள்ளிப்படை சமாதிகள் என்ற சொல்லாட்சி இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கி.பி. 7 மற்றும் 8-ம் நூற்றாண்டைச் சார்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டில், முதன்முதலில் பள்ளிப்படை பற்றிய குறிப்பு காணப்படுவதாகவும், பள்ளிப்படை என்ற சொல் இறந்தவர்களுக்கு எழுப்பப்பட்ட நினைவுத் தூணை குறிப்பவை எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.