ஆன்லைன் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடும் நபர்களின் பணம், எந்திரக் கோளாறு அல்லது இணையதள சேவையில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உரிய நபர்களைச் சென்று சேராவிட்டால், பாதிக்கப்படும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் இனி அபராதம் செலுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறி உள்ளது.
இந்தியாவில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன. இதனால், ஆன்லைன் பணப் பரிவர்த்தனையில் உள்ள குறைபாடுகளைக் களைய ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில், ஆன்லைன் பணப் பரிவர்த்தனையின் போது தவறுகள் நேர்ந்தால், அதை உரிய காலத்தில் சரி செய்யாத வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் – என ரிசர்வ் வங்கி சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதன்படி,
ஒரு பயனாளர் நெஃப்ட், ஆர்.டி.ஜி.எஸ், ஐ.எம்.பி.எஸ் ஆகியவற்றின் மூலமோ, அல்லது வங்கிகளின் பணம் செலுத்தும் எந்திரம் மூலமாகவோ ஆன்லைன் பணப் பரிவர்த்தனையில் ஈடுபடும் போது, எந்திரக் கோளாறு அல்லது இணையதள சேவையில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறால் அவர் செலுத்திய பணம் உரிய நபருக்குச் சென்று சேரவில்லை என்றால், 5 நாட்களுக்குள் உரிய நடவடிக்கையை வங்கிகள் எடுக்க வேண்டும். அப்படியாகச் செய்யத் தவறும்பட்சத்தில், வங்கியானது பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ஒவ்வொரு நாளுக்கும் 100 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
இந்தப் பணப் பரிமாற்றம் கார்டு மூலம் செய்யப்பட்டதாக இருந்தால் அதற்கு 5 நாட்கள் அவகாசமும் கிடையாது, அடுத்த ஒரு நாளுக்குள் பணம் உரியவரின் கணக்கிற்கு செல்ல வேண்டும் அல்லது பணம் செலுத்திய வாடிக்கையாளருக்கு திருப்பி அளிக்கப்பட வேண்டும். இரண்டையும் செய்யாவிட்டால் வங்கிகள் வாடிக்கையாளருக்கு ஒவ்வொரு நாளுக்கும் 100 ரூபாய் அபராதம் அளிக்க வேண்டும் – என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ரிசர்வ் வங்கி பெறும் புகார்களின் பெரும்பாலானவை, ‘என்னிடம் பணம் பிடித்துவிட்டார்கள், ஆனால் அது உரிய கணக்கில் சேரவில்லை’ – என்பதுதான். பல வங்கிகள் இதுபோன்ற புகார்களோடு வரும் பயனாளர்களுக்கு தீர்வுகளை வழங்குவதில் தாமதம் செய்துள்ளன. இனி வங்கிகளால் அப்படி செய்ய முடியாது. இதுவரை பல்வேறு காரணங்களுக்காக வாடிக்கையாளர்களுக்கு அபராதங்களை விதித்த வங்கிகள் இப்போது வாடிக்கையாளர்களுக்கு அபராதம் செலுத்தும் சூழலுக்கு வந்துள்ளன. இதனால் இந்தியாவில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.