நிதித்துறை அதிகாரிகளுடன் நடத்திய ஊதிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், திட்டமிட்டப்படி வருகிற 31 மற்றும் 1ம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி ஊழியர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தத்தை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சங்கம் போராட்டம் குறித்து தனது அறிவிப்பை வெளியிட்டது.
இதனையடுத்து, டெல்லியில் நிதித்துறை மற்றும் வங்கி தலைமை அதிகாரிகளுடன் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், வேலைநிறுத்தம் குறித்தான அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்பட்டால் ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் திட்டமிட்டப்படி வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடரும் என அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் வெங்கடாச்சலம் தெரிவித்தார். மேலும், வேலைநிறுத்தத்தில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்றும் வெங்கடாச்சலம் தெரிவித்தார்.