இந்தூரில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் வங்கதேசம் 150 ரன்களுக்கு சுருண்டது.
மொமினுல் ஹக் தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் அணியினர் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தூரில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ஷாட்மன் இஸ்லாம் மற்றும் இம்ருல் கயீஸ் ஆகியோர் தலா 6 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதைத் தொடர்ந்து களம் இறங்கிய வங்கதேச வீரர்கள் இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக முஷ்ஃபிகுர் ரஹிம் மட்டும் 43 ரன்கள் எடுத்தார். 58.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த வங்கதேசம் 150 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா தரப்பில் ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இதனையடுத்து மயங்க் அகர்வாலுடன் இணைந்த புஜாரா நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 86 ரன்கள் எடுத்திருந்த போது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. மயங்க் அகர்வால் 37 ரன்னுடனும், புஜாரா 43 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதனால் இந்திய அணி 64 ரன்கள் மட்டுமே பின் தங்கியுள்ளது. இந்தியா அணிக்கு 9 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்து நடைபெற உள்ளது.