U-19 உலக கோப்பை கிரிக்கெட்: வங்கதேச அணி முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், வங்கதேச அணி முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

16 அணிகள் பங்கேற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இதன் இறுதி போட்டியில், தொடர் முழுவதும் தோல்வியை சந்திக்காத இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொண்டது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சக்சேனா 2 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.  இதை தொடர்ந்து ஓரளவு தாக்குபிடித்த திலக் வர்மா 38 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இந்நிலையில், பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்த ஜெய்ஸ்வால் 88 ரன்னில் ஆட்டமிழந்தார். வங்கதேச பந்து வீச்சை எதிர்கொள்ள தடுமாறிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் இந்திய அணி 47.2 ஓவர்களில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சி அளித்தது. இந்திய அணி கடைசி 31 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களம் இறங்கியது. வங்கதேச அணி 163 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழையால் ஆட்டம் தடைபட்டது. மழை ஓய்ந்த பிறகு, இலக்கானது 170 ஆக மாற்றி அமைக்கப்பட்டது. இதனையடுத்து 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்ற வங்கதேச அணி, சாம்பியன் பட்டத்தை முதன் முறையாக கைப்பற்றியது.

Exit mobile version