கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையில் சுமார் இரண்டு லட்சம் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்துள்ளன.
மேட்டுப்பாளையத்திற்கு உட்பட்ட சிறுமுகை, பள்ளபாளையம், பகதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் சில தினங்களாக மழை பெய்து வருகிறது. சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையால் லட்சக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்துள்ளன.
மேலும் சூறாவளிக் காற்றால் குடியிருப்புகளின் மேற்கூரைகளும் சேதமடைந்தன. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அச்சமடைந்தனர். சாலைகளில் இருந்த மரங்களும் வேரோடு சாய்ந்தன.
இரண்டு லட்சத்திற்கும் அதிகமான வாழைமரங்கள் சேதமடைந்துள்ளதால் ஏக்கருக்கு பல லட்சம் ரூபாய் செலவு செய்து வாழை சாகுபடி செய்த விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். எனவே சேதமடைந்த வாழைகளை உடனடியாக கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.