கஜா புயல் காரணமாக தேனியில் வாழை இலைகள் கடும் சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகளும், வியாபாரிகளும் கவலையடைந்துள்ளனர். தேனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் விவசாயிகள், 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வாழை சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் தாக்கிய கஜா புயலில் சிக்கி டெல்டா மாவட்டங்கள் பெரிதும் பாதிப்படைந்தன.
பல்வேறு இடங்களில் தென்னைகள், வாழைகள் என கடும் சேதத்திற்குள்ளாகின. இதனால் தேனி பகுதியில் சந்தைக்கு வாழை இலை வரத்து மிகவும் குறைந்துள்ளது. தற்போது சபரிமலை சீசன் என்பதால் விரதம் மற்றும் பூஜைகள் காரணமாக வாழை இலை விலை உயர்ந்து இருந்தது.
இருப்பினும், புயலால் வாழை இலை சேதமடைந்து சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளும், வியாபாரிகளும் வேதனையடைந்துள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறையினர் இழப்பீடு
வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.