பாலித்தீன் பைகள் மீதிருந்த தடையை அமெரிக்காவின் கலிஃபோர்னியா அரசு நீக்கியுள்ளது. கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. சமூகப்பரவலை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 2016 ஆம் ஆண்டு முதல் கலிஃபோர்னியாவில் பாலித்தீன் பைகள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் வீட்டிலிருந்து பைகளைக் கொண்டுவந்தே பொருட்கள் வாங்குவதை கலிஃபோர்னிய வாசிகள் கடைபிடிக்கின்றனர். ஆனால், இப்போது கொரோனா பரவல் அதிகமாக இருப்பதனால், சூப்பர் மார்க்கெட் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் உள்ள ஊழியர்களுக்கு வாடிக்கையாளர்களின் பைகளைக் கையாளும்போது நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனைக் கருத்தில்கொண்டு, ஒருமுறை பயன்படுத்தப்படும் பாலித்தின் பைகளை கடைகளில் உபயோகிக்க அனுமதியளிக்க வேண்டுமென கலிஃபோர்னிய மளிகைப் பொருட்கள் விற்பனை சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. அதை ஏற்றுக்கொண்ட அரசு, அடுத்த இரண்டு மாதங்களுக்கு பாலித்தீன் பைகள் மீதான தடையை நீக்கியுள்ளது.