நமது அண்டைநாடான பாகிஸ்தானின் கராச்சி பங்குச் சந்தையில், தீவிரவாத குழுக்கள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளன. தீவிரவாதத்தை சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஒரு நாடு, கடந்த சில ஆண்டுகளாக, தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகி வருவதன் பின்னணி குறித்து இந்த தொகுப்பில் காணலாம்..
கராச்சி பங்குச் சந்தையில், கிரானைடு குண்டுகள் வீசியும் , துப்பாக்கியால் சுட்டும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த திடீர் தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 4 வீரர்கள் உயிரிழந்தனர். பொதுமக்கள், காவல்துறையினர் என 8 பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகளையும் சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படையினர், அதிநவீன கையெறி குண்டுகள், துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற அமைப்பு இந்த தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது. தனிநாடு கேட்டு பல ஆண்டுகளாக ஆயுதம் ஏந்தி போராடி வரும் இந்த அமைப்பு, பாகிஸ்தானில் சீன முதலீட்டிற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சீன நாட்டவரை குறிவைத்து இதற்கு முன்னரும் பல தாக்குதல்களை நடத்தியுள்ளது. கடந்த ஆண்டு குவாடாரில், சீன நட்சத்திர விடுதியில் நுழைந்து இதேபோன்று ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது. 2018 ஆம் ஆண்டு கராச்சியில் உள்ள சீன தூதரகம் தாக்குதலுக்கு உள்ளானதில் 4 பாதுகாவலர்கள் கொல்லப்பட்டனர்.
கராச்சி பங்கு சந்தையில் நடத்தப்பட்ட தாக்குதலை இந்தியா தான் தூண்டி விட்டதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் மெக்மூத் குரேஷி குற்றம்சாட்டியுள்ளார். எனினும் பாகிஸ்தானைப் போல் இந்தியா நடந்து கொள்ளாது என்றும் உலகின் எந்த மூலையில் தீவிரவாத தாக்குதல் நடந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என இந்திய தரப்பில் பதிலடி தரப்பட்டுள்ளது
உலக நாடுகளுக்கு சீனா கொரோனா வைரசை எவ்வாறு ஏற்றுமதி செய்ததோ அதேபோன்று பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்து வருகிறது. பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தைப் போல ஏராளமான தீவிரவாத குழுக்கள் பாகிஸ்தானில் இயங்கி வருகின்றன. அந்நாட்டு ராணுவத்தினால் வளர்க்கப்படும் இந்த அமைப்புகள், அவர்களையே பதம் பார்த்த சம்பவங்கள் ஏராளம் உண்டு. கடந்த 2014 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பெஷாவார் நகரில் உள்ள ராணுவப் பள்ளியில், தெரிக் இ தாலிபான் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் கண்மூடித் தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 148 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பிறகு பயங்கரவாதிகள் மீது ஓரளவு கடுமையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுத்தது.
ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் தாலிபான், அல்கொய்தா போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் அரசும், அதன் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐயும் உதவி வருகின்றன. இந்தியாவில் இயங்கும் லஷ்கர் இ தொய்பா, இந்தியன் முஜாகிதீன் போன்ற அமைப்புகளும் பாகிஸ்தானின் தூண்டுதல் பேரிலேயே பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றன. இதனால் பாகிஸ்தான் மீது பல்வேறு நாடுகள் அதிருப்தியில் உள்ளன. குறிப்பாக அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு நிதியுதவி மற்றும் போர்தளவாடங்கள் அளிக்க தொடர்ந்து மறுத்து வருகிறது. சர்வதேச நிதியம் பாகிஸ்தானை GREY நிற பட்டியலில் வைத்துள்ளதால் உலக நாடுகளும் நிதியுதவி அளிக்க இயலாத சூழல் நிலவுகிறது.
பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தும் வரை பொருளாதார வீழ்ச்சி, வன்முறை, அரசியல் குழப்பம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு பாகிஸ்தானால் தீர்வு காண முடியாது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.