டென்னிஸ் பந்தின் அளவில் உள்ள பாலி ரோபோ

டென்னிஸ் பந்தின் அளவில், வடிவத்தில் உள்ள ஒரு சிறிய ரோபோவால் ஒரு வீட்டில் உள்ள பெரும்பாலான வேலைகளை செய்ய முடியும் – என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?.

கைக்குள் அடங்கும் அளவில் உள்ள ஒரு உருண்டை வடிவ ரோபோதான் பாலி. பார்க்க அப்படியே டென்னிஸ் பந்தைப் போல உள்ள இந்த சிறிய ரோபோவில் கேமரா, ஸ்பீக்கர் ஆகியவை உள்ளதோடு, குரல் கட்டளைகளை புரிந்து கொள்ளும் சென்சார், மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் சென்சார்கள், பல்வேறு சாதனங்களை இயக்கும் ரிமோட் கட்டுப்பாடு போன்ற பல்வேறு கருவிகளும் இடம்பெற்று உள்ளன. மேலும் பாலியை தரையில் ஊர்ந்து செல்லவைக்கும் வலிமையான மோட்டார் அமைப்பும் இதில் உள்ளது.
 
இந்தக் கருவிகளின் உதவியோடு, ஒரு வீட்டு வேலையாள் செய்யும் வேலைகளில் பெரும்பாலானவற்றை செய்யக் கூடியதாக இந்தக் குட்டி ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. வீட்டைப் கண்காணிப்பது, வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது முதல், வீட்டில் உள்ளவர்களை எழுப்பி உடற்பயிற்சிக்கு அனுப்புவது, வீட்டை தூய்மை செய்வது வரை பல்வேறு வேலைகளைச் செய்யும் திறனுடன் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது.
 
வீட்டின் உரிமையாளர் வீட்டில் இல்லாத போதும் பாலி ரோபோ மூலம் வீட்டை முழுமையாக கண்காணிக்க முடியும் என்பதுடன், தேவையான பல வேலைகளையும் இதன் மூலம் செய்யலாம். வீட்டில் குழந்தைகள், முதியவர்கள், செல்லப் பிராணிகள் இவற்றை தனியே விட்டுச்
செல்பவர்களுக்கு இது கட்டாயம் உதவியாக இருக்கும்.
 
தற்போதுதான் ஆய்வகத்தில் இருந்து வெளியே வந்துள்ள இந்த பாலி ரோபோவை, சாம்சங் நிறுவனம் அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடந்து வரும் மின்சாதனப் பொருட்கள் கண்காட்சியில் முதன்முறையாக பார்வைக்கு வைத்துள்ளது. எதிர்காலத் தொழில்நுட்பங்களில் ஒன்றாகப் பார்க்கப்படும் இந்த பாலி ரோபோவுக்கு இன்னும் விலை நிர்ணயம் செய்யப்படவில்லை என்றாலும், நடுத்தர மக்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாத விலைக்குத்தான் இது சந்தைக்கு வரும் எனத் தெரிகின்றது.

Exit mobile version