பாலாவின் புதிய படத்திற்கு இசையமைப்பாளர் யார் தெரியுமா?

பாலாவின் அடுத்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. கடைசியாக வர்மா திரைப்படத்தை இயக்கியிருந்த பாலா தற்போது ஆர்.கே.சுரேஷை வைத்து ஜோஸப் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரித்து வருகிறார். அடுத்ததாக அதர்வாவையும், ஜி.வி.பிரகாஷையும் வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். வேல ராமமூர்த்தி கதை வசனம் எழுதும் இப்படத்தில் இன்னும் சில இளம் நடிகர்களையும், நடிக்க வைக்க பாலா திட்டமிட்டுள்ளார். இப்படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டால், இருவரும் இணைந்து பணியாற்றும் முதல் திரைப்படமாக அமையும். 

நடிகர் அருண் விஜய்யின் மகன் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. 2டி எண்டர்ட்டய்ன்மெண்ட் மூலம் திரைப்படங்களை தயாரித்து வரும் சூர்யா,  பசங்க போன்று குழந்தைகளை மையமாக வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறார். 2டி தயாரிப்பில் உருவாகும் எட்டாவது படமான இப்படத்தில், நடிகர் அருண் விஜய்யின் மகன் அர்னவ் அறிமுகமாகிறார். நிவாஸ் பிரசன்னா இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அருண் விஜய், சூர்யாவின் தயாரிப்பில் தன் மகன் அறிமுகமாவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இப்படத்தை சாரோவ் சண்முகம் இயக்குகிறார். 

அருண் விஜய் அடுத்ததாக ஹரி இயக்கத்தில் நடிக்க உள்ளார். அருண் விஜய் நடிப்பில் கடைசியாக மாஃபியா திரைப்படம் வெளியானது. அடுத்ததாக வா டீல், அக்னி சிறகுகள், பாக்சர் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த ட்ரம்ஸ்டிக் புரடக் ஷன்ஸ் நிறுவனம், ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தை தயாரிப்பதாகவும், அதிக பட்ஜெட்டில் தயாராகும் இப்படம் பற்றிய மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளது.

 

 

 

Exit mobile version