திருப்பூரில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்ற தொகையை திருப்பி செலுத்த போனில் அழைத்து ஆபாசமாக மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
திருப்பூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த ரகுபதி முத்துமணி தம்பதியர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பஜாஜ் நிறுவனம் ஒன்றில் கடன் பெற்று செல்போன் வாங்கியுள்ளனர். மாதம் 2 ஆயிரத்து 600 ரூபாய் என 4 மாதங்களாக செலுத்தி வந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் வேலை இல்லாத சூழலில் தவணை கட்ட முடியாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் 2 மாத தொகை 7 ஆயிரம் ரூபாயை செலுத்த கோரி பஜாஜ் நிறுவனத்திடமிருந்து அழைப்பு வர முதற்கட்டமாக 3 ஆயிரம் ரூபாய் செலுத்திய நிலையில் மீதமுள்ள தொகையை செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளனர். இது தொடர்பாக தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர், அவரை வழக்கறிஞர் என அடையாளபடுத்தி கொண்டு பணம் செலுத்த கோரி மிரட்டியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர். வேலை இல்லாத காரணத்தால் பணம் கட்ட சிறிது தாமதம் ஏற்பட்டதாகவும், நிலைமையை புரிந்து கொள்ளாமல் இது போன்று மிரட்டுவதாகவும் கூறிய அவர்கள், இதே நிலை நீடித்தால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என தெரிவித்துள்ளனர்.