"பேச்சுலர்" திரைப்படம்- 2k கிட்ஸ்களுக்கான காதல் திருவிழா

பேச்சுலர் – 2k கிட்ஸ்களுக்கான காதல் திருவிழா 

தமிழ் சினிமாவில் வழக்கமாக வெளியாகும் காதல் படங்களில் இருந்து, கொஞ்சம் வித்தியாசமாக எடுக்க முயற்சிக்கப்பட்டுள்ளது ‘பேச்சுலர்.’ சதீஷ் செல்வகுமார் இயக்குநராக அறிமுகமாகியுள்ள இந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், திவ்யாபாரதி, பகவதி பெருமாள், முனிஸ்காந்த் இவர்களுடன் பெரும் இளைஞர்கள் பட்டாளமே களமிறங்கியுள்ளது.

கோவையைச் சேர்ந்த இளைஞர்கள் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கின்றனர். பக்ஸ் தலைமையிலான இவர்களுடன் டார்லிங் என்ற பாத்திரத்தில் வரும் ஜி.வி. பிரகாஷும் கூட்டு சேருகிறார். வேலை, குடி, கும்மாளம் என கொண்டாட்டமாக நாட்களை நகர்த்திவரும் இவர்களில், ஜி.வி. பிரகாஷ் மட்டும் நாயகி சுப்புவுடன் லிவிங் டுகெதரில் இருக்க, அதன்பிறகு திரைக்கதை காதல், கூடல், ஊடல் என திசை மாறுகிறது. இதன் விளைவாக நாயகி சுப்பு கருவுற, இடைவேளைக்குப் பின்னர் இன்னும் பல அதிரடி திருப்பங்களுடன் முடிவுக்கு வருகிறது பேச்சுலர்.

முதல் பாதியே முழுசா ஒரு படம் பார்த்த சோர்வைத் தருகிறது, அப்படியிருந்தும் இரண்டாம் பாதியை இன்னும் நீட்டி முழக்கியிருக்கிறார் இயக்குநர். லிவிங் டுகெதரை தவறாக நினைக்காத ஜி.வி. பிரகாஷ், நாயகி கருவுற்றதும் கெளரவம் பார்க்கிறார். இதனால் நாயகி கோர்ட்டுக்குப் போக, ஜி.வியின் அம்மா, அக்கா என மொத்த குடும்பமும் சிறை செல்கிறது, கூண்டில் ஏறுகிறது. காதலர்களால் அவர்களது குடும்பத்தினர் எப்படி பாதிக்கப்படுகின்றனர் என்பதை இவ்வளவு அழுத்தமாக பதிவு செய்த இயக்குநர், திரைக்கதையை இத்தோடு முடித்திருக்கலாம். ஆனால், அதனை விட்டுவிட்டு ஜி.வி தன்மீதான குற்றத்தை மறுக்க செய்யும் அதிரடியையும் திரையில் காட்டி மூன்று மணி நேரத்திற்கு ரசிகர்களை நொந்து போகச் செய்கிறார்.

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி, மலையாளத்தில் பிரேமம், அங்கமாலி டைரீஸ் படங்களின் சுவடுகள் இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளில் அப்பட்டமாக தெரிகின்றன. இவைகளையும் மீறி ‘பேச்சுலர்’ பல வகைகளில் ரசிகர்களை கட்டிப்போடுகிறது. பக்ஸ், முனிஸ்காந்த், ஜி.வியின் நண்பர்களாக வரும் பெருங்கூட்டம் காமெடி காட்சிகளில் அப்ளாஸ் அள்ளுகின்றனர். நண்பர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணமாக அவர்களது பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், படம் நெடுக இடம்பெற்றுள்ள இரட்டை அர்த்த வசனங்கள் சில இடங்களில் சிரிக்கவும், சில காட்சிகளில் முகம் சுழிக்கவும் வைத்துள்ளன.

எதற்கும் கவலைப்படாத நாயகன் பாத்திரத்தில் ஜி.வி. பிரகாஷ் கச்சிதமாகப் பொருந்துகிறார். அதேநேரத்தில் காதலியுடன் முரண்படும் இடங்களில் அவரது நடிப்பில் நல்ல முதிர்ச்சியை காணமுடிகிறது. நாயகி திவ்யா பாரதிக்கு இது முதல் படம் என்பதை நம்பமுடியவில்லை. இயக்குநர் மிஷ்கின் பாத்திரம் கதைக்கு தேவையே இல்லாத ஒன்று.

ஜி.வி. பிரகாஷ், சிந்து குமார், திபுநினன் தாமஸ் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக ‘பச்சிகளாம் பறவைக்கெல்லாம்’ என்ற கும்மி பாடல் திரையில் பார்க்க புது அனுபவத்தை தருகிறது. சிந்து குமாரின் பின்னணி இசையும், தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரும் பலம், திரைக்கதையின் நீளம் மட்டுமே படத்திற்கு மைனஸ்.

இளமையையும் புதுமையையும் ஒருசேரத் திரையில் கொண்டுவர நினைத்த இயக்குநர் சதீஷ் செல்வகுமாரின் முயற்சிக்கு ‘பேச்சுலர்’ வெற்றி என்றே சொல்லலாம்.

– அப்துல் ரஹ்மான்

Exit mobile version