அரசுத் துறை மற்றும் அரசு சின்னத்தை தவறாக பயன்படுத்தி, நாமக்கல் மாவட்ட திமுக நிர்வாகிகள் தேர்தல் முறைகேட்டில் ஈடுபடுவதாக, மாநில தேர்தல் ஆணையரிடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாமக்கல் மாவட்டம், மாவட்ட ஊராட்சிக் குழு 6வது வார்டில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் வாக்காளர்களை கவர்வதற்காக, உண்மைக்கு புறம்பான செய்திகளை சொல்லி அரசுத்துறைகளை திமுகவினர் தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தால் 5 ஆயிரம் ரூபாய் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து,
அரசு அலுவலர்கள் இல்லங்களுக்கே வந்து வாக்காளர்களை உறுப்பினர்களாக இணைப்பார்கள் என்றும், அதற்கான பயனும் உடனடியாக கிடைக்கும் என்றும் கூறி நல வாரிய உறுப்பினர் விண்ணப்பங்களை திமுகவினர் விநியோகித்துள்ளனர்.
இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையரிடம், அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாபு முருகவேல் புகார் அளித்துள்ளார்.
திமுக மாவட்டச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் அறிவுறுத்தலின் பேரில், திமுகவினர் இந்த முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும்,
இவற்றை உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
தேர்தலை நியாயான முறையில் நடத்தி முடிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் பாபுமுருகவேல் கூறினார்.