1927ம் ஆண்டின் மார்ச் மாதம் அது. சுற்றியிருந்தவர்களிடம் என்ன நடக்குமோ? என்ற பதட்டம் தொற்றியிருந்தது. சிலரது முகங்கள் அச்சத்தில் ஊறியிருந்தன. ஆனால், சவுதார் குளம் மட்டும் எந்தவித சலனமுமின்றி வழக்கம்போல அதன்பாதையில் ஓடிக்கொண்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் அங்கே புரட்சிக்கான விதை தூவப்பட்டபோகிறது என்பதை அது அறிந்திருக்க வாய்ப்பில்லை.
குழுமியிருந்தவர்களிடையே சலசலப்பு அதிகரித்துகொண்டிருந்தது. இருளை கிழித்துக்கொண்டு வரும் சூரியக்கதிர்களைப்போல அம்மக்களின் மீட்பராக அங்கே தோன்றினார் அம்பேத்கர்.
“பொதுக் குளமான சவுதார் குளத்தை தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்த உயர்ஜாதியினர் அனுமதிக்க வேண்டும். அதை நிறைவேற்ற சவுதார் குளத்திற்கு மாநாட்டு பிரதிநிதிகள் ஊர்வலமாக செல்ல வேண்டும்” என்று முடிவெடுத்து அறிவித்தார். அவரது கட்டளையே சாசனமாக நிறைவேற்றப்பட்டது. உரிமையை நிலைநாட்ட ஊர்வலம் அரங்கேறியது. உரிமைகள் என்பது கெஞ்சிப்பெறுவதல்ல; எடுத்துக்கொள்வது என்பதை உணர்த்தும் விதமாக குளத்தில் இறங்கி தண்ணீரை பருகினார்.
பருகியது என்னமோ அவர்தான் என்றாலும், குளிர்ந்தது அங்கிருந்த மக்களின் உள்ளங்கள். `எரியுதடி மாலா’ என்ற வசனத்தைப்போல இதை ஏற்றுக்கொள்ள முடியாத உயர்சாதியினர் தாழ்த்தப்பட்ட மக்களை வேட்டையாடினர். அடித்து துன்புறுத்தினர். குருதியின் வழியே உரிமைகள் கட்டி எழுப்பப்பட்டிருக்கின்றன என்பது தானே வரலாறு!
தொடர் சட்டப்போராட்டங்களை நடத்த முடிவு செய்தார். அதன் விளைவுதான், 1937 டிசம்பரில் பம்பாய் உயர்நீதிமன்றம் மகர் குளத்தை தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்த உரிமை வழங்கி ஆணையிட்டது. இதனை சாத்தியப்படுத்தி சரித்திரமானவர்தான் அம்பேத்கர்! உரிமை வேட்கையின் நாயகன். ஆக்டோபஸாக நீண்ட மனுவின் கோரக்கரங்களை துண்டித்து எறிந்த படைவீரன். எழுத்தின் வித்தகன். கல்வித் தீ கொண்டு ஒடுக்குமுறைகளைக் கொளுத்திய அந்தப் பேரறிவாளனின் பிறந்த நாள் இன்று… உண்மையில் பிறந்த நாளுக்கு மட்டும் கொண்டாடக்கூடியவர் அல்ல அவர்.
சட்ட மேதை, தொழிற்சங்கத் தலைவர், பொருளியல் நிபுணர், பேராசிரியர், தொழிலாளர் துறை அமைச்சர், வழக்கறிஞர், பங்குச் சந்தையின் வர்த்தக ஆலோசகர் என படிக்கும்போதே மூச்சுவாங்கும் அளவுக்கான பன்முகங்களை தரித்துக்கொண்டு உரிமைக்காக களமாடிய இந்த நாயகனை நாள்தோறும் நினைவுகூற வேண்டியது காலத்தின் தேவை. காரிருளை களைந்து சூரியன் வெளிச்சம் படைக்குமாம். அப்படியாக மனிதகுல ஒடுக்குமுறைகளைக் களைந்த தலைவனை தாழ்த்தப்பட்டவர்களுக்கான தலைவனாக மட்டும் முன்னிறுத்துவது சிறுமைத்தனத்தின் உச்சம்.
அம்பேத்கர் அனைவருக்குமானவர். `8 மணிநேரம் முடிந்துவிட்டது கிளம்புகிறேன்’ என்று கூறி இடத்தை காலி செய்யும் ஒவ்வொரு ஊழியர்களின் உரிமை குரலிலும் அம்பேத்கரின் உழைப்பு ஒளிந்திருக்கிறது. அது உயர்சாதியினராக இருந்தாலும் சரியே! எனக்கு சொத்துரிமை வேண்டும், விவாகரத்து கொடுங்கள் என முழங்கும் பெண்களின் முழக்கங்களின் ஆதி அவர்.
பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டுக்கான அடித்தளத்தை உருவாக்கிக்கொடுத்தவர். ஆனால், இன்று அம்பேத்கர் சிலைகளைச் சேதப்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் யார் என அட்ரஸ் தேடி அலைந்தால் அந்த அட்ராசிட்டிகளை செய்பவர்கள் எல்லாரும் அம்பேத்கரால் இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட இடைநிலைச் சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தான் வேடிக்கை. அடையாளங்களை அழித்தால் சித்தாந்தங்களை சிதைத்துவிடலாம் என்பது மூடர்களின் முட்டாள் தந்திரம். `லைட்ட திருப்புனா வண்டி எப்டி ஓடும்’ என்ற கேள்வி சிலைகளை சிதைப்பவர்களின் சிறுமூளையை பிராண்டிக்கொண்டுதானேயிருக்கிறது. இருந்தாலும் அவர்கள் திருந்துவதில்லை.
அனைவருக்குமான சிவில் உரிமைகள் அடங்கிய அரசியல் சாசனத்தை வடிவமைத்து கொடுத்த தலைவனை குறிப்பிட்ட சாதிக்குள் அடக்குவதை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.
– கலிலுல்லா