மக்களவையில் மன்னிப்பு கோரினார் ஆசம் கான்

மக்களவை உறுப்பினர் ரமா தேவி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக ஆசம் கான் மன்னிப்பு கோரினார்.

மக்களவையில் முத்தலாக் தடை மசோதா மீதான விவாதத்தின் போது பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ரமா தேவி சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ரமாதேவி குறித்து சமாஜ்வாதி எம்.பி ஆசம் கான் ஆட்சேபத்துக்குரிய வார்த்தைகளை கூறினார். இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதனைத் தொடர்ந்து ஆசம் கான் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா, அனைத்து கட்சி தலைவர்களிடம் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் ஆசம் கான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக பெண் எம்பிக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆசம் கான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று காலை மக்களவை கூடியதும், ஆசம் கான் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார்.

Exit mobile version