முதலமைச்சர் உத்தரவின் பேரில், கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் வழங்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா பாதிப்புக்கு இந்திய மருத்துவ முறைகளான சித்தா மற்றும் ஆயுர்வேதா உள்ளிட்ட சிகிச்சைகளை அளிப்பதற்கு “ஆரோக்கியம்” என்ற திட்டத்தினை துவக்கி வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சிறுவில்வம், திப்பிலி வேர், உள்ளிட்ட 17 மூலிகைகள் அடங்கிய ஆயுர்வேத மருந்தான இந்துகாந்த கஷாயம் மற்றும் அகஸ்திய ரசாயணம், கூஷ்மாண்ட ரசாயணம் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதாகவும், இவற்றை காலை, இரவு என இருவேளை சாப்பிட மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த மருந்துகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் ஆயுர்வேத சிகிச்சை பிரிவில் எவ்வித கட்டணமும் இன்றி பொதுமக்கள் பெற்று கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகள், கர்ப்பிணிகள் இந்த மருந்தை மருத்துவர்களின் ஆலோசனைப்படி அருந்தவேண்டுமெனவும், தமிழக அரசால் வழங்கப்படும் சித்தா மருந்தான கபசுர குடிநீரும், ஓமியோபதி மருந்தான ஆர்செனிக் ஆல்பம் 30C யும் எவ்வித கட்டணமில்லாமல் வழங்கி வருவதையும் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கையில் சுட்டிகாட்டியுள்ளார்.