மே-5 அயோத்திதாசர் நினைவு தினம்

உயர் நிலையும், இடை நிலையும், கடை நிலையும் பாகுபடுத்தி அறியமுடியாத மக்களுக்கு நீதி, சரியான பாதை, நேர்மை ஆகியவற்றைக் கற்பிப்பதற்காக சில தத்துவவாதிகளும் இயற்கை விஞ்ஞானிகளும், கணிதவியலாளரும், இலக்கியவாதிகள் பலரும் ஒன்று கூடி இப்பத்திரிக்கையை “ஒரு பைசாத் தமிழன்” வெளியிட்டுருக்கிறோம். தமிழ் மணம் பரவ விரும்பும் தமிழர் ஒவ்வொருவருக்கும் கையொப்பம் வைத்திதனை ஆதரிக்க கோருகிறோம்

1907 ம் ஆண்டு இப்படி ஒரு அறிவிப்போடு வெளிவந்தது ஒரு பத்திரிகை. இந்த ஒரு பைசாத் தமிழன் தான் பின்னாளில் தமிழன் என்ற பெயர் மாற்றத்தோடு தொடர்ந்தது.

தமிழகத்தில் எந்த இயக்கமும் தோன்றாத காலத்தில், சமூக நீதி, சமூக மதிப்பிடுகள் விளிம்பு நிலை ஒடுக்குமுறைகள் குறித்து பேசிய பத்திரிகை அது. அதிகாரத்தில் பங்கு, பிரதிநித்துவ அரசியல்,ஒடுக்கப்பட்டோர் விடுதலை, பெண்ணியம், தமிழ் மொழியுணர்வு, பகுத்தறிவு, சுயமரியாதை, சாதி ஒழிப்பு, , வேத மத, பிராமணீய எதிர்ப்பு, தீண்டாமை போன்ற கருத்துகளை உரையாடல் செய்து பல இயக்கங்களுக்கு ஒரு முழுமையான அரசியல்கொள்கை தொகுப்பை வழங்கிய தமிழன் இதழின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாடி பெருமைப்படுத்தியது. இதழியலிலும், அரசியலிலும் நவீனம் குறித்த கருத்தாக்கங்கள் அன்றைய தமிழன் இதழிலிருந்தே துவக்கம் பெற்றன.

இதைத் தொடங்கியவர் அயோத்திதாசப்பண்டிதர். இயற்பெயர் காத்தவராயன் என்றபோதும் தன் குருபக்தியால் தன் குருவான அயோத்திதாச பண்டிதரின் பெயரையே தன் பெயராக மாற்றிக்கொண்டார்.

தமிழ், சித்த மருத்துவம் மற்றும் தத்துவம் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமையும் ஆங்கிலம், வடமொழி, மற்றும் பாலி மொழி உள்ளிட்ட பல மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்த அயோத்திதாசப் பண்டிதர் சமூகநீதி என்னும் சொல்லுக்கு காரண கர்த்தாவாகவும் விளங்கினார் .

அம்பிகையம்மன் அருளிய திரிவாசகம், அம்பிகையம்மன் சரித்திரம், அரிச்சந்திரன் பொய்கள், ஆடிமாதத்தில் அம்மனை சிந்திக்கும் விவரம், இந்திரர் தேச சரித்திரம், இந்திரர் தேச பௌத்தர்கள் பண்டிகை விவரம், கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சி, சாக்கிய முனிவரலாறு, திருக்குறள் கடவுள் வாழ்த்து, திருவள்ளுவர் வரலாறு, நந்தன் சரித்திர தந்திரம், நூதன சாதிகளின் உள்வே பீடிகை, புத்தர் எனும் இரவு பகலற்ற ஒளி, புத்த மார்க்க வினா விடை, மாளிய அமாவாசை எனும் மாவளி அமாவாசி தன்ம விவரம், முருக கடவுள் வரலாறு, மோசோயவர்களின் மார்க்கம், யதார்த்த பிராமண வேதாந்த விவரம், விபூதி ஆராய்ச்சி விவாஹ விளக்கம், வேஷ பிராமண வேதாந்த விவரம், பூர்வ தமிழ்மொழியாம் புத்தாது ஆதிவேதம், வேஷபிராமண வேதாந்த விவரம் என அத்வைதக் கொள்கையில் ஈடுபாடு கொண்டிருந்த போதும் அரசியலில் ஆதிதிராவிடர் சமூகத்தின் சமநிலையை நிலைநாட்டுவதையே தன் முதல் குறிக்கோளாக கொண்டிருந்தார்.

ஆனால், 1914ம் ஆண்டு மே 5 வழிச்சிந்தனையால் வாழ்க்கை நடத்தும் இன்றைய அரசியலுக்கு மூலச்சிந்தனைகளை வழங்கிய முதற்சிந்தனையாளரான அயோத்திதாசர் இன்னுடல் நீத்து இறந்துபோனார். இன்றைய பெரும்பாலான முற்போக்கு கருத்தாக்கங்களை உருவாக்கிய அயோத்திதாச பண்டிதர் முயற்சிகள் முற்றுப்பெறும் முன்பே அவர் மூச்சை நிறுத்திக்கொள்ள வேண்டியிருந்தது என்பதுதான் சங்கடமே.

திருக்குறள் இன்றைக்கு எல்லோருக்கும் பொதுவேதம். ஆனால் அது 1843ல் முதல் அச்சுப்பிரதியாக திருக்குறள் வெளிவரக் காரணாமாயிருந்தது அயோத்திதாசப்பண்டிதரின் பாட்டனார் அவர்கள் என்பதும் இங்கு கூடுதல் தகவல். மொத்தத்தில், தமிழுலகம் தலைவணங்க வேண்டிய ஆளுமைகளுள் அயோத்திதாசர் ஒருவர் என்பதில் ஐயமில்லை.

Exit mobile version