அயோத்தி நில உரிமை வழக்கில் அனைத்து தரப்பினரும் வாதங்களையும் வரும் 17ம் தேதிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் 2 புள்ளி 77 ஏக்கர் நிலம் வழக்கில், சன்னி வக்பு வாரியம் மற்றும் இந்து மகா சபா மற்றும் நிர்மோகி அகாரா அமைப்புகள் நிலத்தை பகிர்ந்து எடுத்துக் கொள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010ல் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சமரசம் செய்யும் முயற்சியும் தோல்வி அடைந்தது.
இதைத்தொடர்ந்து, அயோத்தி வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு நாள்தோறும் விசாரித்து வருகிறது. இதனிடையே வழக்கு தொடர்பான வாதங்களை முன் வைப்பதற்கான கால அவகாசம் வரும் 18ம் தேதிக்குப் பிறகு ஒருநாள் கூட நீட்டிக்கப்படாது, என்று நீதிபதிகள் அமர்வு திட்டவட்டமாக தெரிவித்தது. இந்தநிலையில் அயோத்தி வழக்கில் வரும் 17ம் தேதிக்குள் வாதங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.