நாளை நடைபெறுவதாக இருந்த அயோத்தி வழக்கு விசாரணை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமை தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அமர்வில் தலைமை நீதிபதியுடன், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நசீர் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். இந்த அமர்வு முன் நாளை இந்த வழக்கு விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி எ.ஏ.பாப்டேவுக்கு நாளைய விசாரணையில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. எனவே நாளை நடைபெறுவதாக இருந்த விசாரணை திடீரென ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.