அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கவுள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை, சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய தரப்புகள் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010இல் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.போப்டே, எஸ்.அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையில், மூன்று பேர் கொண்ட மத்தியஸ்தர் குழுவை அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த குழு தனது இடைக்கால அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் கடந்த 6ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது.

Exit mobile version