சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் குறித்த வழக்கின் விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2 புள்ளி 77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கடந்த மாதம் இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை என கூறி புதிய அமர்வின் விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்தநிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அயோத்தி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை வரும் ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் இன்றைய விசாரணை வெறும் 2 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.