நாட்டையே உலுக்கிய அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில்15 பேர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. …இந்த வழக்கு கடந்த வந்த பாதை என்ன…?
சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், வாய் பேச முடியாத, காது கேளாத 11 வயது சிறுமியை, அந்த குடியிருப்பில் பணிபுரிந்த 17 பேர் பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2018-ஆம் ஆண்டு 17 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.. 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை 2019-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி உயர்நீதிமன்றம் ரத்து செய்த போதிலும், அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படாததால், தொடர்ந்து கடந்த ஒன்றரை வருடமாக அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாராணை கடந்த 2019 ஜனவரி முதல், டிசம்பர் வரை 11 மாதங்களாக நடைபெற்ற நிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது, 7 குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சிகளும், 36 அரசு தரப்பு சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு, 120 ஆவணங்கள்
சமர்ப்பிக்கப்பட்டன. குற்றவாளிகள் அனைவரும் மீதும், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை, கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், காயமேற்படுத்துதல் அகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாலியல் சட்டத்தின் 10 மற்றும் 12-வது பிரிவுகளின் கீழ் குற்றவாளிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தவிர 2018-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குற்றவியல் திருத்தச் சட்டத்தின் கீழ் புதிதாக நிறைவேற்றப்பட்ட பிரிவுகளின் கீழும் குற்றவாளிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட 17 பேரில் பாபு என்பவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்ட நிலையில், குணசேகரன் என்பவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். எஞ்சிய 15 பேரும் குற்றவாளிகள் என அறிவித்துள்ள சிறப்பு நீதிமன்றம், தண்டனை விவரங்கள் வரும் 3 ஆம் தேதி அறிவிக்கப்படுமென தெரிவித்துள்ளது.