அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகள் 15 பேருக்கும் போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று தண்டனை அறிவித்தது.
சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அந்த குடியிருப்பில் பணிபுரிந்த 17 பேரை போக்சோ சட்டத்தின் கீழ், கடந்த 2018ம் ஆண்டு காவல்துறையினர் கைது செய்தனர்.
குற்றம்சாட்டப்பட்ட 17 பேரில் பாபு என்பவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 16 பேரில், குணசேகரன் என்பவரை மட்டும் விடுவித்து மற்றவர்களை குற்றவாளிகள் என போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடந்த 1 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
இதனையடுத்து இவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.குற்றவாளிகள் ரவிகுமார், சுரேஷ், பழனி மற்றும் அபிஷேக் ஆகிய 4 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனையை போக்சோ சிறப்பு நீதிமன்றம் வழங்கியது.
இதே போல் குற்றவாளி ராஜசேகருக்கு ஆயுள் தண்டனையை போக்சோ சிறப்பு நீதிமன்றம் வழங்கியது. குற்றவாளிகள் சுகுமாரன், முருகேசன், பரமசிவம், ஜெய்கணேஷ், தீனதயாளன், ராஜா, சூர்யா, ஜெயராமன் மற்றும் உமாபதி ஆகிய 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், குற்றவாளி எரால்பிராஸ் என்பவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் போக்சோ சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இதனிடையே பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம் உட்பட மருத்துவ சாட்சிகள் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டதாக, அரசுத் தரப்பு வழக்கறிஞர் ரமேஷ் தெரிவித்துள்ளார். நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசுத் தரப்பில் சிறந்த மருத்துவர்களை கொண்டு சிறுமியை பரிசோதித்த பிறகே சாட்சியங்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நீண்ட விசாரணைக்கு பிறகே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.