சமூக வளைத்தளங்களை பாதுகாப்பான முறையில் எச்சரிக்கையுடன் கையாள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, உஷார் யூசர்ஸ், சகலகலா பூச்சண்டி என்ற குறும்படத்தை, சென்னை பெருநகர காவல் துறை மற்றும் முருகாப்பா குழுமம் இணைந்து தயாரித்துள்ளது.
தற்போதைய சூழலில் இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை, அனைவரும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அதில், எதை பகிர வேண்டும், எதை பகிரக் கூடாது என்ற விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது, சமூக வலைத்தளங்கள் மூலம் ஏற்படும் குற்றங்கள் அதிகரிக்க காரணமாக உள்ளது.
ஃபேஸ்புக், டிவிட்டர், யூ ட்யூப், வாட்ஸ் ஆப் மற்றும் வங்கிக் கணக்குகள் குறித்து அனைத்தையும் நாம் பாதுகாப்பான முறையில் கையாள வேண்டியது அவசியம். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சமூக வலைதளங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது குறித்து, முருகப்பா குழுமமும் காவல் துறையும் இணைந்து ‘உஷார் யூசர்ஸ், சகலகலா பூச்சண்டி’ என்ற குறும் படத்தை தயாரித்துள்ளது.
தற்போதைய சூழலில், நம்மிடையே இருப்பவர்கள் மீதான நம்பகத்தன்மை குறைந்து வருவது வருத்தமளிப்பதாகவும், நாம் புகைப்படத்தை பகிரும் போதும், மற்றவருடன் பேசும் போதும், கவனத்துடன் செயல்பட வேண்டும் என கூறுகிறார் காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.