சேலத்தில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வுப் பேரணி

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி, சேலத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் காவல்துறையினர் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டது.

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் இன்று நாடெங்கிலும் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, போதைப் பொருளால் நாட்டு மக்களின், குறிப்பாக இளைஞர்களின் வாழ்வு சீரழிவதை குறிப்பிடும் வகையில், பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்வுகள், பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சேலத்தில் மாநகர காவல்துறை மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு சார்பில், விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ரோகிணி தலைமையில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி, வள்ளுவர் சிலை, கோட்டை மாரியம்மன் கோயில் வழியாக மாநகராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது. பேரணியின் முன்பாக பொம்மைகளைக் கொண்டு போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

பேரணியில் மாநகர காவல் ஆணையர் சங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கர்னிகர், மாநகராட்சி ஆணையர் சதீஷ், காவல்துறையினர், மாணவ, மாணவிகள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். இந்த நிகழ்வையொட்டி நடத்தப்பட்ட ஓவிய மற்றும் கட்டுரை போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கினார்.

Exit mobile version