விழிப்புணர்வே விழி திறக்கும்!! 'தேசிய கண் தான வாரம்'…

ஆண்டு தோறும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் 8 வரை, தேசிய கண் தான வாரம் கடைபிடிக்கப்படுகிறது. தானங்களில் ஆகச் சிறந்த தானமான, கண் தானம் செய்வதன் அவசியம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு…

உலகெங்கிலும் பார்வையில்லாமல் இருளில் தவித்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற மனிதர்கள், எப்படியாவது இந்த உலகை கண்டிட மாட்டோமா? என ஏங்கித் துடிப்பது உண்டு. இதற்கு மருத்துவ சிகிச்சைகள் ஓரளவு பயனளித்தாலும், பெரும்பான்மையான தேவை என்பது கண் தானமே. இந்த கண் தானத்தை வலியுறுத்தி ஆண்டுதோறும், ஆகஸ்ட் 25 முதல், செப்டம்பர் 8 வரை, தேசிய கண் தான தினம், இரண்டு வாரங்களுக்கு கடைபிடிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் கருவிழிகள் தானமாக தேவைப்படும் நிலையில், இந்தியாவில் இதில் பாதியளவு மட்டுமே தானமாக கிடைப்பதாக தெரிவிக்கின்றனர், கண் மருத்துவ நிபுணர்கள். கண் தானம் அளிப்பதன் மீதான தவறான புரிதல்கள், மூட நம்பிக்கைகள், விழிப்புணர்வுகள் இல்லாததுமே இதற்கு தடையாக இருப்பதாக கூறுகின்றனர். இந்தியாவில் ஓராண்டில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையோ சுமார் ஒரு கோடி என்ற நிலையில், கண் தானங்களின் எண்ணிக்கை சுமார் 50 ஆயிரம் என மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது.

கண் தானம் செய்பவர் எந்த பாலினத்தவராகவும் அல்லது எந்த வயது பிரிவைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். ஆனால், ஹெச்.ஐ.வி, ரத்தம் நச்சடைதல், ரத்தப் புற்றுநோய், காலரா போன்ற நோய்களால் பாதிப்படைந்தவர்கள் கண் தனம் செய்ய முடியாது என்கின்றனர் மருத்துவர்கள்.

மனிதனுக்கு பார்வை எப்படி முக்கியமானதோ, அதேபோல், கண்தானம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், காலத்தின் தேவையாக உருவெடுத்துள்ளது.

 

 

Exit mobile version