தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் திருப்பூர் மண்டலம் சார்பில், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது
அதில், நமது சேவை சிறப்பாக அமைய நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என தலைப்பிட்டு 6 முக்கிய வழிமுறைகளை குறிப்பிட்டுள்ளது.
பேருந்துகள் பெயர் பலகையுடன் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு வருவதையும், வெளியேறுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும், ஒவ்வொரு பேருந்து ஓட்டுநரும் முந்தைய பேருந்தை அனுப்பி வைத்து விட்டு, தங்கள் பேருந்தை ரேக்கில் நிறுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படிக்கட்டில் நின்று பயணம் செய்பவர்களை பேருந்தினுள் அனுப்பி விட்டு பேருந்தை இயக்க வேண்டும், இணைப்பு வழித்தடத்தில் பேருந்தை இயக்குபவர்கள், இணைப்பு பேருந்து வந்தபின்பே பேருந்தை இயக்க வேண்டும், பயணிகள் தொடர்ந்து பயணிக்கும் வகையில் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை பின்பற்றுவதால் தங்களுக்கும் பயணிகளுக்கும் இடையே இணக்கமான சூழ்நிலை நிலவுவதாகவும், அனைத்து மண்டலங்களிலும் இது போன்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட வேண்டும் என்றும் திருப்பூர் மண்டல ஊழியர்கள் தெரிவித்தனர் .