மத்திய நீர்வள மேம்பாடு அமைச்சகத்தின் சார்பாக நிலத்தடி நீர் மேம்பாடு, நீர் நிலைகளை உருவாக்குதல் மற்றும் புனரமைப்பு உள்ளிட்ட 7 பிரிவுகளில் தமிழகத்திற்கு விருதுகள் வழங்கப்பட்டது.
மத்திய அரசின் நீர்வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில், தேசிய நீர் விருதுகளை மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்காரி வழங்கினார். அந்த வகையில், தென்னிந்தியாவின் முன்னோடி மாவட்டமாக, திருநெல்வேலி மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. அதேபோல், தென்னிந்தியாவில், நீர் நிலைகளை உருவாக்குதல் மற்றும் புனரமைப்புக்காக மதுரை மாவட்டம் முதலிடத்தையும், சிவகங்கை மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. தென்னிந்திய அளவில், நிலத்தடி நீர் மேம்பாட்டிற்காக மதுரை மூன்றாம் இடம் பெற்றுள்ளது; சிறந்த குடியிருப்பு நல சங்கத்திற்காக, பல்லாவரத்தின் ஜெயின்ஸ் கிரீன் ஏக்கர்ஸ் ஃபிளாட் சங்கத்திற்கும், சிறு குறு தொழில் நிறுவனத்திற்காக, ஈரோட்டின் கே.ஜி.எல்.எஃப் நிறுவனத்திற்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், சிறந்த ஊராட்சி நிர்வாகத்திற்காக நாகப்பட்டினத்தின் தரங்கம்பாடி 2-ஆம் இடத்தையும், அதே மாவட்டத்தின் மணல்மேடு 3-ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. மேலும், ஈஷா ஃபவுண்டேஷனுக்கு சிறந்த கல்வி மற்றும் வெகுஜன விழிப்புணர்வு முயற்சிக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.