கொரோனா வைரஸ் அறிகுறியுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருவதை, பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என தேவஸ்தானம் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
திருமலையில் உள்ள இணை செயல் அலுவலர் அலுவலகத்தில், அப்பகுதி மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி ஆய்வு நடத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும் திருமலைக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வருவதோடு அவ்வப்போது கைகளை கழுவுவதற்கு தேவையானவற்றை கொண்டு வருவது மிகவும் நல்லது எனவும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், கொரோனா அறிகுறிகள் உள்ள பக்தர்கள் திருமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.