கணினி வழி குற்றங்களை தடுக்க போலி இணையதளங்களை தவிர்க்க வேண்டும் -காவல் ஆணையர் விஸ்வநாதன்

கணினி வழி குற்றங்களை தடுக்க போலி இணையதளங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை பெருநகர காவல்துறை, சைபர் சொசைட்டி ஆப் இந்தியா மற்றும் வாய்ஸ் ஆப் வாய்ஸ்லெஸ் இணைந்து நடத்தும் சர்வதேச கணினி பாதுகாப்பு தினம் 2018, நிகழ்ச்சியை சென்னையில் காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், வங்கிகளை குறிவைத்து சைபர் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். கணினி வழி குற்றங்களை தடுக்க போலி இணையதளங்களை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பள்ளி, கல்லூரி சிறுமிகள் பாலியல் தொந்தரவில் இருந்து தப்பிக்க அவர்களுக்கு கொடுக்கப்படும் தொழில்நுட்ப உபகரணங்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் கடந்த ஆண்டு சைபர் குற்றங்கள் தொடர்பாக 10 ஆயிரத்து 254 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 399 குற்ற வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை பெற்று கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version