மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள “அவதார் கார்”

அவதார் திரைப்படத்தில் வந்த உயிரினங்கள் மற்றும் தாவரங்களின் தோற்றங்களை அடிப்படையாகக் கொண்ட, ஒரு அதி நவீன மின்சாரக் காரை மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.

உலகத் திரைப்பட வரலாற்றில்  மிக முக்கிய திரைப்படம் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார். இந்தத் திரைப்படத்தில் ‘பண்டோரா’ என்ற கற்பனை கிரகம் பல விநோதமான உயிரினங்களோடும் தாவரங்களோடும் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். அந்தத் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு, அதன் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுடன் இணைந்து ‘விஷன் ஏ.வி.டி.ஆர்.’ என்ற அதி நவீன மின்சாரக் காரை பிரபல சொகுசுக்கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடீஸ் பென்ஸ் அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் உள்ள ஏ.வி.டி.ஆர். என்பது ’அட்வான்ஸ்டு வெகிக்கில் டிரான்ஸ்பர்மேஷன்  (Advanced Vehicle Transformation)’என்பதன் சுருக்கம் ஆகும்.
 
விலங்குகளிடம் இருந்து எந்த மூலப் பொருட்களையும் எடுக்காமல், தாவரங்களைச் சார்ந்த பொருட்களை மட்டும் கொண்டு 100% வீகன் காராக இது உருவாக்கப்பட்டு உள்ளது. விலங்குகளில் தோல் பயன்படுத்தபட வேண்டிய இடங்களில் கூட மர வேரில் இருந்து கிடைக்கும் பொருட்களையே பயன்படுத்தி உள்ளனர்.
 
அவதார் திரைப்படத்தில் வரும் பறக்கும் ஜெல்லி மீன்களை நினைவுபடுத்தும்படி இந்தக் காரின் ஒளிரும் சக்கரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வண்டியை திருப்பும் போது இவையே இண்டிகேட்டர்களாகவும் செயல்படுகின்றன. இந்த சக்கரங்களை பக்கவாட்டில் கூட இயக்க முடியும் என்பதால் பார்க்கிங் செய்வது எளிது.
 
ஸ்டியரிங்கே இல்லாத இந்தக் காரை நமது வலதுகையின் அசைவுகளைக் கொண்டு எளிதாக இயக்க முடியும். நாம் காரை ஓட்டும் நேரத்தில் நமது ரத்த ஓட்டம், இதயத்துடிப்பு, சுவாசம் அனைத்தையும் இந்தக் கார் கவனித்து அவற்றுக்கு ஏற்றபடி நடந்து கொள்ளும்.
 
இந்தக் கார் ஒரு எந்திரமாக இருந்தாலும் விலங்கு போலவே வடிவமைக்கப்பட்டு உள்ளது, இதன் பின் புறத்தில் விலங்குகளுக்குக் காணப்படும் செதில்கள் அல்லது முடிகளைப் போல 33 உணர்ச்சியுள்ள பேனல்கள் இணைக்கப்பட்டு உள்ளன, கார் ஓடும் போது நீலமாக ஒளிரும் இவை, பிரேக் அடிக்கப்படும் போது சிகப்பாக மாறும், மேலும் காரின் அசைவுகளுக்கு ஏற்றபடி அசையும். எந்த மாசையும் வெளியிடாத இந்தக் கார் முழுதும் மின்சாரத்தில் இயங்குகின்றது.

ஒருமுறை இதனை சார்ஜ் செய்தால் 700 கிலோ மீட்டர்களுக்குப் பயணிக்க முடியும். இப்போதுதான் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்டு உள்ள இந்தக்காரின் விலை உள்ளிட்ட விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை, அதற்காக சொகுசுக் கார் ரசிகர்களும், அவதார் பட ரசிகர்களும் பெரும் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.

Exit mobile version