பொங்கல் திருநாளையொட்டி, மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. காலை 8 மணிக்குத் தொடங்கும் இந்த போட்டியில் 700 காளைகள் களமிறங்குகின்றன.
மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில், ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் திருநாளன்று ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் இன்று அவனியாபுரத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டி, காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழுவினர், ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்கின்றனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்காக மதுரை-திருமங்கலம் சாலையில், வாடி வாசல் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட 700 காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக, காலையில் இருந்து களமிறக்கப்படும். அதுபோல, காளைகளை அடக்க தேர்வு செய்யப்பட்டுள்ள 700 மாடுபீடி வீரர்கள் குழுக்களாக களமிறக்கப்படுவார்கள். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை இந்தக் குழு மாற்றப்படும். விதிமுறைகளுக்குட்பட்டு, காளைகளை பிடித்த வீரர்களுக்கும், வீரர்களிடம் சிக்காத காளைகளுக்கும் விழாக்குழு சார்பில் பரிசுகள் வழங்கப்படும்.