பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், முதலிடம் பிடித்த மாடுபிடி வீரருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.
தை முதல்நாளான நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. காலை 8 மணிக்கு துவங்கிய போட்டியில், 641காளைகளும், 610மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். 9 சுற்றுகளாக 610 மாடுபிடி வீரர்கள் களம் இறக்கப்பட்டனர். வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை வீரத்துடன் அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு வெள்ளிக்காசு, சைக்கிள், கட்டில், பீரோ உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல், வீரர்களுக்கு போக்கு காட்டி களத்தில் நின்று விளையாடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியில் அதிகபட்சமாக 14 காளைகளை தழுவிய மதுரையை சேர்ந்த விஜய் என்ற மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக இருசக்கர வாகனம் பரிசாக வழங்கபட்டது. 13 காளைகளை தழுவிய பரத்குமார் மற்றும் 10 காளைகளை தழுவிய திருநாவுக்கரசு ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்து பரிசுகளை வென்றனர். அதேபோல், களத்தில் நின்று விளையாடி மாடுபிடி வீரர்களுக்கு போக்குக்காட்டிய புதுக்கோட்டை மாவட்டம் அனுராதா என்பவரின் காளைக்கு வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது.