அவலாஞ்சி ஊழியர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்: அமைச்சர் தங்கமணி

கன மழையால் பாதிக்கபட்ட அவலாஞ்சி மின்நிலைய ஊழியர்களுக்கு குடியிருப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் விரைவில் செய்து தரப்படும் என தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பகுதியில் பெய்த வரலாறு காணாத மழையால் பலத்த சேதம் ஏற்பட்டது. இதில் அவலாஞ்சி பகுதியில் பணிபுரிந்து வரும் 100-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் சிக்கி தவித்தனர். காட்டு குப்பை மின்நிலையத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில் தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி அவலாஞ்சி மின் நிலையத்தை ஆய்வு செய்தார். மேலும் மின்வாரிய ஊழியர்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழக மின்துறையில் உள்ள 5 ஆயிரம் காலி பணி இடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றார். மேலும் கன மழையால் பாதிக்கபட்ட அவலாஞ்சி மின் வாரிய ஊழியர்களுக்கு குடியிருப்புகள் ஆம்புலன்ஸ் வசதிகள் உள்பட அனைத்து வசதிகளும் செய்து தரபடும் என்று தெரிவித்தார்.

Exit mobile version