ஆவடி மாநகராட்சியின் காவல் ஆணையராக பதவியேற்றுக்கொண்ட சந்தீப் ரத்தோர்,திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் நாசரிடம் உங்களது ஆசிர்வாதம் வேண்டும் என்று வேண்டியது, திமுக ஆட்சியில் காவல்துறை மற்றும் உயரதிகாரிகளின் நிலையை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
ஆவடி மற்றும் தாம்பரம் மாநகராட்சிகளின் புதிய காவல் ஆணையரகங்களை முதலமைச்சர் நேற்று தொடங்கி வைத்தார். ஆவடியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகராட்சி காவல் ஆணையராக சந்தீப் ரத்தோர் பதவியேற்றுக்கொண்டார்.
இதையடுத்து, அதிகாரிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் நாசரிடம் சென்ற காவல் ஆணையர் சந்தீப் ரத்தோர், அவரது கைகளை பற்றிக்கொண்டு, உங்களது ஆசிர்வாதம் வேண்டும் என்று பணிவாக கோரினார்.
நடுநிலையாகவும், கம்பீரமாகவும் செயல்பட வேண்டிய காவல் ஆணையர், அமைச்சரிடம் சிரம் தாழ்ந்து நடந்துக்கொண்டது, அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது.
ஏற்கனவே, திமுக அரசின் கைப்பாவையாக காவல்துறை மாறி பல்வேறு சம்பவங்களையும், பொய் வழக்குகளையும் பதிவு செய்து வருவதாக பெரும்பாலானோர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
திமுக ஆட்சியில் கடந்த 8 மாதங்களாக காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களை திமுகவினர் மிரட்டி காரியம் சாதிப்பதாக பல்வேறு புகார்களும் தொடர்ந்து எழுந்து வருகிறது.
இந்த நிலையில், ஒரு காவல் ஆணையரே அமைச்சரிடம் இப்படி நடந்துகொண்டது, காவல்துறை மீதான நம்பிக்கையை கேள்வி குறியாக்கியுள்ளது.