ஸ்ரீவில்லிபுத்தூரில் சுமார் 10 வருடங்களாக ஆட்டோ ஓட்டும் தொழில் நடத்தி வரும் வைரமுத்து என்பவர், தனது ஆட்டோவை கார் போல் மாற்றி பயணிகளை மகிழ்வித்து வருகிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், 108 வைணவ தலங்களில் முக்கியமான ஸ்தலமாகும். இவ்வூரில் அமைந்துள்ள ஆண்டாள் கோவில் ராஜகோபுரம், தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக விளங்கி வரும் பெருமையை பெற்றுள்ளது. இதே போன்று, இப்பகுதியை சுற்றிலும், எண்ணற்ற சுற்றுலாத்தலங்கள் அதிகமாக உள்ளன.
இந்த சுற்றுலா பகுதிகளுக்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து, தினந்தோறும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் பயணம் செய்ய ஏதுவாக ஆட்டோ ஒன்றை சொகுசு கார் போல் மாற்றி, பயணிகளை கவரும் வண்ணத்தில் வடிவமைத்துள்ளார் வைரமுத்து என்ற ஆட்டோ ஓட்டுநர். இதில் பயணிக்கும் வாடிக்கையாளர்கள் நல்ல மனநிறைவுடன் செல்கின்றனர். இந்த சொகுசு ஆட்டோவில் பயணிக்க, சுற்றுலா பயணிகளும், உள்ளூர் பொதுமக்களும் அதிகம் விருப்பம் காட்டுகின்றனர்.
காரில் உள்ளது போலவே, பவர் விண்டோ, ஏர் கண்டிஷன், ரிவர்ஸ் கேமரா, டிவி, கூகுள் மேப் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளதால், ஆட்டோ ஸ்டாண்டில் எத்தனை ஆட்டோக்கள் இருந்தாலும், வைரமுத்துவின் ஆட்டோவை தேடியே பலரும் வருகின்றனர். இதனால், இவரது ஆட்டோவில் தினசரி பயணிக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.
சொகுசு நிறைந்த ஆட்டோ என்றாலும் பயணிகளை கவரும் நோக்கில், மற்ற ஆட்டோக்களில் உள்ள வழக்கமான கட்டணத்தையே வைரமுத்துவும் தனது ஆட்டோவுக்கு நிர்ணயித்திருப்பது, சற்றே இன்ப அதிர்ச்சி கொடுக்கின்றது.
குறைந்த கட்டணம், சொகுசுப் பயணம் மட்டுமல்லாமல், இன்முகத்தோடும், பண்போடும் பயணிகளிடம் வைரமுத்து நடந்து கொள்ளும் விதம், அவர் மீது அனைவருக்கும் நன்மதிப்பை பெற்றுத்தந்துள்ளது. இவரை போன்றே அனைத்து அல்லது அனேகமான ஆட்டோ ஓட்டுநர்களும் மாறினால், அனைவருக்கும் ஆட்டோ பயணத்தின் மீதான ஆர்வமும், பெண்களுக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் மீதான நம்பிக்கையும் நிச்சயம் அதிகரிக்கும்.