சாலையில் கிடந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகையை நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்

கோவையில் சாலையில் கிடந்த, சுமார் 2 லட்ச ரூபாய் மதிப்புடைய நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை,மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், நேரில் அழைத்து பாராட்டினார்.

கோவையை சேர்ந்த காயத்திரி என்பவர், நகை கடையில் தவணை முறையில் பணம் செலுத்தி வந்துள்ளார். தவணை முடிந்த நிலையில், 39 கிராம் எடையுள்ள தங்க நகையை வாங்கி தனது இருசக்கர வாகனத்தில் பையில் வைத்து கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது செஞ்சிலுவை சங்க கட்டிடம் அருகே செல்லும் போது நகையை தவறவிட்டுள்ளார். இந்த நிலையில், ஆட்டோ ஓட்டுநர் கோபு என்பவர், சாலையில் பை ஒன்று இருப்பதையும், அதில் நகை இருப்பதையும் கண்டு, காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். அதில் இருந்த ரசீதில் காயத்ரியின் செல்போன் எண் இருந்ததையடுத்து, காவல் துறையினர் நகையை அவரிடம் ஒப்படைத்தனர். அந்த பையில் இருந்த நகையின் மதிப்பு 2 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஆட்டோ ஓட்டுநர் கோபுவை, கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் நேரில் அழைத்து பாராட்டினார்.

Exit mobile version