திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில, ஆட்டோ ஓட்டுநர் சங்கத்துக்கு யார் தலைவரா வரனும்ங்கர பிரச்சனையில இரண்டு பேர் ஒருவர் மீது ஒருவர் கொலை வெறித்தாக்குதல் தாக்குதல் நடத்தியிருக்காங்க.. இதுல ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்… யார் அவர்?
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கோட்டை தெருவைச் சேர்ந்தவர் 30 வயதான நசீர் கான். ஆட்டோ ஓட்டுநரான இவர், முன்பு ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவராகவும் இருந்துள்ளார். அதன் பிறகு மஸ்தான் என்பவர் தலைவராக இருந்து வந்தார். இதனால், நசீர் கானுக்கும், மஸ்தானுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மஸ்தானை தனியாக ஒரு இடத்திற்கு அழைத்து சென்று, கடுமையாக தாக்கிய நசீர் கான், அவரை கொலை செய்ய முயற்சியும் செய்துள்ளார். அதில் இருந்து தப்பிய மஸ்தான், நசீர் கானை பழிவாங்க சரியான நேரம் பார்த்து வந்துள்ளார். அதன்படி, கடந்த 7ம் தேதி இரவு நசீர் கான் தன்னுடைய வேலையை முடித்துகொண்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
அப்போது, திடீரென்று வீட்டிற்குள் புகுந்த பத்து பேர் கொண்ட கும்பல், நசீர் கானை சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நசீர்கானின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பிரேத பரிசோதனை முடிந்த பிறகு, நசீர் கானின் உடலை சாலையில் வைத்து, கொலை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என நசீர் கானின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு நசீர் கான் உடலை எடுத்துச் சென்றனர். இந்த நிலையில் நசீர் கானை வீடு புகுந்து கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.