ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன் தன்னுடைய அணி வீரர்களுக்காக ஒரு உதவியாளர் போல கையில் தண்ணீர் பாட்டிலுடன் மைதானத்திற்குள் வந்தது இணையத்தில் வைரலாகி வருகிறது
இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது. மொத்தம் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ள நிலையில் நேற்று பயிற்சி ஆட்டத்தின் போது இலங்கை அணியும், ஆஸ்திரேலிய பிரதமர்(Eleven) XI அணியும் மோதின
ஆஸ்திரேலிய பிரதமர் XI அணி என்பது அந்நாட்டு பிரதமரால் தேர்வு செய்யப்படும் வீரர்களைக் கொண்ட அணி. பாரம்பரியம் கொண்ட இந்த அணி ஆண்டுக்கு ஒருமுறை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் வரும் அணிகளுடன் விளையாடும். வருடம்தோறும் பங்கேற்கும் இந்த அணிக்கு அங்கு ரசிகர்கள் ஏராளம். சரி சம்பவத்துக்கு வருவோம். நேற்றைய போட்டியைக் காண ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மைதானத்துக்கு வந்திருந்தார். போட்டியைக் கண்டு கொண்டிருந்தவர் இரண்டாவது இன்னிங்ஸில் 16வது ஓவரின்போது திடீரென மைதானத்துக்குள் புகுந்தார். தனது அணியின் தொப்பியை அணிந்து கொண்ட அவர், பிரதமர் என்பதையும் மறந்து கையில் தண்ணீர் பாட்டில்களுடன் மைதானத்திற்குள் இறங்கி வீரர்களுக்கு வழங்கினார்.
மோரிசனின் செயலால் மைதானத்தில் இருந்த அனைவரும் ஆரவாரம் செய்து அவருக்குப் பாராட்டு தெரிவித்தனர். இதுதொடர்பான புகைப்படங்களும் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தீவிர கிரிக்கெட் ரசிகர். ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தால் அதை காணுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
ஜனவரியில் மெல்போர்ன் மைதானத்தில் நடந்த பாக்ஸிங் டே கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் பெய்ன் மற்றும் இந்திய விக்கெட் கீப்பர் பன்ட் ஆகியோர் மோதிக்கொண்டனர். இதுகுறித்து கேள்விப்பட்ட மோரிசன், ரிஷப் பன்டைச் சந்தித்தபோது, “நீங்க தானே மைதானத்தில் வீரர்களை வம்புக்கு இழுத்தீங்க. உங்களை மிகவும் வரவேற்கிறோம். நாங்கள் போட்டி மனப்பான்மை உள்ள விளையாட்டை விரும்புகிறோம்” என்று சிரித்துக்கொண்டே கூறினார். இதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செல்லும் அணி வீரர்களை தனது இல்லத்துக்கு அழைத்து உபசரிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார் மோரிசன்….